யூரியூப் வீடியோக்கள் வெளியிடும் டிவனியாவை விடுதைல செய்யுமாறு தெரிவித்து தயார் மற்றும் உறவினரால் மகஜர் ஒன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனிடம் குடும்பத்தார் மற்றம் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து அந்த மகஜரை கையளித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இயங்கிய யூரியூப் அலுவலகத்தில் வைத்து கடந்த வருடம் மார்ச் மாதம் 29ம் திகதி டிவனியா, விமல் என்பவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தீவிரவாத கொள்கைகளை பரப்பும் வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு பல தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகவும், அதற்கமைய ‘குறித்த யூடியூப் மற்றும் இணையத்தளம் என்பவற்றை நிர்வகித்த அலுவலகம் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அலுவலகத்திலிருந்த 35 வயதுடைய பெண் ஒருவரும், 36 வயதுடைய ஆண் ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது 5 மடிக்கணனிகள் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.
2011 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கைகளைப் பரப்புதல், அவ் அமைப்பின் சின்னத்தை வைத்திருத்தல், இலங்கையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடுதல் ஆகிய குற்றத்தின் கீழ் குறித்த கைது இடம்பெற்றதாகவும், பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் டிவனியாவை விடுதலை செய்யக்கோரி இன்று அவரது தாயார் மற்றும் மாற்றுவலுவுள்ள பிள்ளை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இவர்களிற்கு ஆதரவாக இன்னும் சிலரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அதோடு டிவனியாவின் விடுதலையை வலியுறுத்தி 1500 கையோப்பங்கள், கிராம மட்ட அமைப்புக்களின் ஒப்பங்களுடன் இன்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
இம்மாத இறுதிக்குள் டிவனியாவை விடுதலை செய்யாவிடின் முதலாம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக டிவனியாவின் தாயார் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
இதேவேளை, அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா ஆகியோர் வலியுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.