இலங்கையில் நடைமுறையிலுள்ள வற் வரி மீண்டும் அதிகரிக்கப்படலாம் என பொருளியல் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைய 15 வீதமாக வற் வரி அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராய, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிகள் இலங்கை வருகின்றனர்.
இதன்போது மத்திய வங்கியிடம் வைக்கப்படும் முக்கிய கோரிக்கையாக சகல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (வற்) 15 சதவீதமாக உயர்த்துமாறு கோருவது அடங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
இலங்கையில் சமகாலத்தில் வற் வரி 8 வீதமாக காணப்படுகிறது. எனினும் 2019 நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை வற் வரி 15 சதவீதமாக காணப்பட்டது. சுற்றுலாத் துறையின் சகலவிதமான சேவைகளும் வற் வரிகளிலிருந்து விலக்கழிக்கப்பட்டிருந்தது.
இலங்கை வரும் பிரதிநிதிகள், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வற் வரியும் அதிகரிக்கப்படுமாயின் அது மக்கள் மீது பாரிய சுமையாக திணிக்கப்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.