இலங்கை சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில், அரசியல் நிலைமைகளை உடனடியாக சரியான நிலைக்கு நிறுவுங்கள் என்பதை வலியுறுத்தி இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட போராட்டக்காரர்கள், இனவாதத்தை முன்னிறுத்தி ஆட்சி பீடம் ஏறிய குறித்த ஆட்சியாளர்கள் ஒரு நல்லது செய்திருக்கிறார்கள் இவ்வளவு காலமும் நாட்டு மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் ஊடாக அனைவரும் ஒன்றுபட்டு இருக்கின்றனர் என தெரிவித்தனர்.
ஊழல் நிறைந்த அரசியலில் இருந்து அவர்கள் விடுபட்டு நல்லதொரு சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.