இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றில் அனுப்பி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்தளு.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று விளையாட்டுச் சட்டத்தில் சில புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருந்ததோடு, அதற்கு எதிராக தற்போது பல தேசிய விளையாட்டு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைமை உறுப்பினர் சங்க அதிகாரி கென்னி ஜீன் மேரி அனுப்பியுள்ள கடிதத்தில், கால்பந்து அதிகாரிகள் தேர்தலில் வௌியக தலையீடுகளை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக எதிர்க்கிறது.
2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு மற்றும் காலக்கெடுவிற்கு அமைவாக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 22ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இல்லை என்றால் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படுவதுடன், நிதித் தடைகளை விதிக்கவும் பரிசீலிக்கப்படும் எனவும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுப்பிய கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் முன்னாள் செயலாளர் உபாலி ஹெவே ஆகியோர் விளையாட்டு அமைச்சுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.