வறுமையில் வாடும் பெண்ணொருவர், தனது குழந்தைகளுக்காக கொள்வனவு செய்த அரிசி மற்றும் உணவுப்பொருட்கள், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கதிர்காமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒரு கிலோ அரிசி, 250 கிராம் சீனி, 200 கிராம் கருவாடு மற்றும் குழந்தைகளுக்காக வாங்கிய பிஸ்கட் என்பனவெ இவ்வாறு களவாடப்பட்டுள்ளன. கதிர்காமம் , மல்லிகாமாதாகம பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இந்நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த பெண் கதிர்காமம் நகரில் மீன் விற்பனை செய்யும் சைக்கிள் ஒன்றை நிறுத்தி, பொருட்கள் அடங்கிய பையை கீழே வைத்துவிட்டு மீன் கொள்வனவு செய்த போது கீழே வைத்த பை காணாமல் போயுள்ளது.
கதிர்காமம் பிரதேசத்தில் வாழும் மக்களின் 80 சதவீதமானோர் கதிர்காமத்துக்கு விஜயம் செய்யும் யாத்திரீகர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மிக்க இந்த காலகட்டத்தில் கதிர்காமத்திற்கு வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது