இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதால், இந்திய ரூபாய்களை நாட்டின் வர்த்தகச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்திக்கூடிய நிலைமை ஏற்படலாமென முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் ஏற்படப்போகும் உணவுப் பஞ்சத்தைத் தடுக்க தவறினால், மக்கள் வீதிக்கு இறக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். நாட்டின் ஆட்சியாளர்களுக்கு நாடு வங்குரோத்தடைந்துள்ளமை தெரியவில்லை என சாடிய அவர், நாட்டுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கான பொருட்கள் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனால் நாட்டில் பாரிய உணவுப் பஞ்சம் ஏற்படப்போகிறது. சுனாமியின் இரண்டாது அலை வருமென நான் இதற்கு முன்னர் எச்சரித்திருந்தேன். தற்போது இரண்டாது அலை ஆரம்பித்துவிட்டது. இதனை செப்டெம்பர் மாதத்தில் நன்கு உணர முடியும் எனவும் தெரிவித்தார்.
ஆனல் ஆட்சியாளர்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கே 21ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதாக குற்றம் சுமத்திய அவர், நாட்டில் பொருளாதார பிரச்சினை இருக்கிறது. எனினும் விவசாயத்தையே தற்போது கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாடு வங்குரோத்தடையவில்லை என எவராலும் கூற முடியாது. விவசாயத்துக்கு தேவையான டீசலை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கூறிய முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் , இல்லை என்றால் அரசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிதி நாட்டில் இல்லை எனவும் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு தயாராகி வருகிறார்கள். இலங்கையை அமெரிக்க, சீனாவிடமிருந்து வேண்டுமானாலும் காப்பாற்றிவிடலாம் ஆனால் இந்தியாவிடமிருந்து காப்பாற முடியாது எனவும் கூறினார்.
அதோடு கடந்த 2500 வருடங்களாக இலங்கையை இந்தியா நாசமாக்கியுள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஒருவேளை இந்தியா வழங்கும் கடன்களை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் நாட்டிலுள்ள துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய பாரதூரமான நிலை ஏற்படும் எனவும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.