கொஸ்மோதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரெல்ல இலுக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று (27) இரவு கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரபல இசைக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கும் அவர் திருமணம் முடித்துள்ள இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
பின்னர், அது வாக்குவாதமாக மாறி, வீட்டுக்குச் செல்லும் வழியில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு குறித்த நபர் தனது மனைவியை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
எனினும், குறித்த பெண்ணின் 10 வயது மகனின் தலையில் கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுவன் பின்னர் மொரவக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் துரதிஷ்டவசமாக சிறுவன் இன்று (28) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மொரவக, வெலிவ பகுதியில் உள்ள பௌத்த பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு கல்வி கற்கும் சதேவ் மெத்சர என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நாட்டின் பிரபல இசைக்குழு ஒன்றின் பாடகரும் வாத்தியக் கலைஞருமான நபர் , இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரவக்க பொலிஸார் இன்று காலை அவரை கைது செய்துள்ளனர்.