நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச்சம்பவம் நேற்று(05.09.2026) இடம்பெற்றுள்ளது.
நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் குறித்த இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீட்புப் பணி
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23 வயதுடைய அன்பழகன் நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மலையக பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில் மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

