துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு நிதியமைச்சுக்கு இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவுறுத்தப்படவில்லை. தேவையான டொலரை விடுவிப்பதற்கான வழிமுறைகள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் தங்களின் கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதில் ஏதேனும் சிக்கல் நிலை காணப்படுமாயின் அது குறித்து நிதியமைச்சுக்கு அறிவிக்குமாறும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பு தொடர்பிலான தீர்மானம் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும். இந்த அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய சுமார் 1300 கொள்கலன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கும், உரிய அதிகாரிகளுக்கும் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான அமைச்சரவை உபகுழு கூட்டத்தின் போது அறிவுறுத்தினார்.