ரஷ்யாவிடமிருந்து இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு செலவாகும் அதிகமான பண செலவை குறைக்கும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கை திட்டமிட்டு வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு எதிராக தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக அந்நாட்டில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைகளை கோரியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது சம்பந்தமாக எரிசக்தி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து மிக குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என்பதால், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அது தொடர்பில் கவனத்தை செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா ஏற்கனவே இந்தியாவுக்கு குறைந்த விலையில் எரிபொருளை விநியோகித்து வருகிறது.
அத்துடன் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தொடர்பான நெருக்கடியான நிலைமையில் இந்தியாவே இலங்கைக்கு எரிபொருளை விநியோகித்து வருகிறது.