தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் எம்பிலிபிட்டிய சந்திரிக்கா வாவிக்குள் குதித்ததில், தாயும் அவரது 5 வயது மகனும் உயிரிழந்துள்ள நிலையில் 11 வயதான மகன் உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சூரியவெவ பகுதியைச் சேர்ந்த சுரங்கிகா மதுமாலி எனும் 32 வயதான தாயொருவரே இவ்வாறு தனது இரு பிள்ளைகளுடன் சந்திரிக்கா வாவியின் மதகுப் பகுதியிலிருந்து வாவிக்குள் குறித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த தாய் இரு பிள்ளைகளுடன் வாவிக்குள் குதித்த பின்னர், 11 வயதான சாம் துஷ்மந்த எனும் மகன் நீந்தி கரைப் பகுதிக்கு வந்து, கூக்குரல் எழுப்பி உதவி கோரியுள்ளார்.
இதனையடுத்து பிரதேசவாசிகளும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரும் உடனடியாக சந்திரிக்கா வாவியில் குதித்து, தாயையும் மகனையும் மீட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் இருவரின் நிலைமையும் அப்போதும் கவலைக் கிடமாக இருக்கவே உடனடியாக அவர்கள் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு 5 வயதான நெத்மால் எனும் மகன் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் மாலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த தாயிடமிருந்து 2 ஆயிரம் ரூபா பணமும் தொலைபேசி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.