வவுனியா, உக்குளாங்குளம் கிராமத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்ததையடுத்து அதனை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் அனுசரணையுடன் உக்குளாங்குளம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக மக்களுக்கான விசேட விழிப்புணர்வு ஊட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, உக்குளாங்குளம் கிராமத்தில் 3 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டையடுத்து மக்களுக்கு டெங்கு அபாயம் குறித்தும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை உக்குளாங்குளம் பொது மண்டபத்தில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மக்களது வீடுகள், காணிகள், வீதிகள், பொது இடங்கள் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர், பொலிசார் இணைந்து பார்வையிட்டு அவற்றின் தன்மை குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதுடன், அதனை தொடர்ந்தும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. டெங்கு பரவக் கூடிய இடங்களை அகற்றுவது தொடர்பான ஆலோசனைகளும் வீடு வீடாகச் சென்று சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டது.