அலுதபெந்திவெவ, ஒபடேகமவெவ, திக்வெவ உள்ளிட்ட பல சிறிய குளங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் கறவை மாடுகளுக்கு உணவும் தண்ணீரும் வழங்குவதும் பிரச்சினையாக மாறியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், லக்கல களு கங்கை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து, களு கங்கை நிர்மாணத்தின் போது மூழ்கிய பல்லேகம நகரத்தின் சில இடங்கள் தற்போது மீண்டும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.
கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், எதிர்வரும் சிறுபோகச் செய்கை அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
தண்ணீர் இன்றி அப்பகுதியில் விலங்குகள் இறந்து கிடப்பதையும் காண முடிகிறது.
இதனிடையே, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களில் நாளை நண்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய’ மட்டத்தில், அதாவது 39 முதல் 45 செல்சியஸ் பாகைக்கு இடைப்பட்ட அளவில் இருக்கும் என வானிலை அவதானிப்பகம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலையினால் உடலிலிலிருந்து அதிகளவு நீர் வெளியேறி நீரிழப்பு (Dehydration) ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால், முடிந்தவரை அதிகமாக தண்ணீர் அருந்துமாறு சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

