யாழ்ப்பாணம் சுழிபுரம் பிரசித்தி பெற்ற பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள், பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசியல்வாதிகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் விநாயகர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்திற்கு அருகே முருகன் ஆலயமும் உண்டு. இந்த ஆலய வளாகத்தில் உயரமாக வளர்ந்த அரச மரம் காணப்படுகின்றது.
அண்மைக் காலமாக வழிபாடு என்ற போர்வையில் படையினரின் உதவியுடன் பௌத்த பிக்குகள் அடிக்கடி இந்த ஆலயத்திற்கு வந்து சென்றனர். இதைவ்வாறான நிலையில் பௌர்ணமி தினத்தன்று இங்குள்ள அரச மரத்தடியில் படையினரின் உதவியுடன் பிக்குகள் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள முனைப்புக் காட்டியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும் பௌத்த பிக்குகள் தெரியப்படுத்தி உள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
பிக்குகளின் மேற்படி நடவடிக்கையை தடுத்து நிறுத்தி தமிழர் பகுதியின் தொன்மையான பறாளாய் விநாயகர் முருகன் ஆலயங்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்காக இன்று பிற்பகல் ஆலய வளாகத்தில் பொதுக் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது