யாழ் மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் 1000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து கடமை நேரத்தில் இன்று அரச உத்தியோகதர்கள் எரிவாயு பெற முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுத் தருவதாக மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிவித்து யாழ்.மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் இருந்து அரச உத்தியோகத்தர்கள் யாழ் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள அரச திறன் விருத்தி மையத்தில் ஒன்று கூடினர்.
இதன்போது அங்குவந்த பொதுமக்கள் சிலர் தமக்கு எரிவாயு சிலிண்டர்கள் வேண்டுமென கேட்ட நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில் அங்கு நின்ற அதிகாரிகள் பதிலளிக்கையில் அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் தமது பிரதேசங்களில் எரிவாயுக்காக பெயர்களை பதிவு செய்த நிலையில் இவ்வாறு பெருமளவு சிலிண்டர்களை அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரே தடவை வழங்குவது எவ் விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.
அது மட்டும் அல்ல அது குறித்த அரச உத்தியோகத்தர்கள் தமது பிரதேசங்களிலும் எரிவாயுக்காக பதிவு செய்த நிலையில் எவ்வித பதிவு அட்டைகளும் இன்றி அரச உத்தியோகத்தர்களுக்கு திரைமறைவில் கறுப்புச் சந்தையை தோற்றுவிக்க பார்க்கிறார்களா எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
அதேவேளை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் ஆகியோர் அப் பகுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு எரிவாயு விநியோகத்தை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்காக வந்த எரிவாயுவை அரச உத்தியோகதர்கள் முண்டியடித்து பெற்றுசென்றுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கடும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்