மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன
மூதூர், 19.06.2026
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் இன்று (19.06.2026) “கல்விக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ் 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாகவும், இசை வழி போராளியாகவும் திகழும் இசைப் போராளி திரு. வேடன் அவர்களின் பங்களிப்புடன், மிகவும் பின்தங்கிய நிலையில் கல்வி கற்கும் மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலய மாணவர்களுக்காக மொத்தம் ரூ. 488,000.00 பெறுமதியான 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
தூரப் பகுதிகளில் இருந்து பாடசாலைக்கு பயணிக்கும் மாணவர்களின் கல்விப் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது கல்வியை இடையூறின்றி தொடர்வதற்கும், கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வலுசேர்ப்பதற்கும் பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மொத்தமாக 10 மாணவர்கள் பயனடைந்ததுடன், திட்டத்தின் மொத்த உதவித் தொகை ரூ. 500,800.00 ஆகும்.
இசைப் போராளி திரு. வேடன் அவர்கள் எமது தாயக மக்களின் வலிகளையும் தேவைகளையும் ஆழமாக உணர்ந்து செயற்பட்டு வருபவர். எம் மக்கள்மீது கொண்டிருக்கும் தனித்துவமான அன்பும் அக்கறையும் காரணமாகவே இவ்வாறான அர்த்தமுள்ள மனிதநேய உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது மனிதநேயப் பங்களிப்பு சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த உயரிய பணிக்காக இசைப் போராளி திரு. வேடன் அவர்களுக்கும், அவருடன் இணைந்து செயற்படும் அனைத்து நலன் விரும்பிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் உதவும் இதயங்கள் நிறுவனம் – Germany (Helping Hearts Foundation Germany) தனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கரம் நீட்டும் அனைவரும் சமூகத்தின் உண்மையான சொத்துக்கள் என்பதை இந்நிகழ்வு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
“கல்விக்கு கரம் கொடுப்போம் – எதிர்காலத்தை உருவாக்குவோம்.”
நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் – Germany
Helping Hearts Foundation Germany
மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன
No Comments1 Min Read
Previous Articleஉலக கிண்ண கால்பந்தாட்டம்
Next Article இலங்கைக்கு வரப்போகும் புதிய மெட்ரோ பேருந்துகள்

