முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள மக்களின் காணிகளில் 11 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரிடம் இருந்து இன்று (28) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்து மக்கள் புதுக்குடியிருப்பில் மீள குடியமர்ந்த போது புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள சுமார் 19 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீள்குடியேறிய மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்தபோதும் எந்தவித தீர்வுகளும் கிடைக்கப்பெறாத நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாசி மாதம் 3 ஆம் திகதி குறித்த பகுதியில் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட 19 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரி 49 குடும்பங்களை சேந்தவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.
போராட்டம் ஆரம்பித்து சுமார் 1 மாத காலத்தில் குறித்த காணிகளை 3 கட்டங்களாக விடுவிப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டது. இருப்பினும் முதலாவது பகுதி காணிகள் விடுவிக்கும் வரை தாம் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்த மக்கள் குறித்த உறுதிமொழிகளுக்கு அமைய முதற்கட்டமாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட 7.75 ஏக்கர் காணி விடுவிப்போடு தொடர் போராட்டத்தை நிறுத்தினர்.
புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட 7.75 ஏக்கர் காணி விடுவிப்பை தொடர்ந்து மீதமுள்ள 29 பேரினது 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் 3 மாதத்திற்குள் விடுவிக்கப்படும் எனவும் மீதமுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த காணி சுமார் 4 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமை குறித்தும் குறிப்பாக சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் 682 ஆவது படைப்பிரிவு முகாம் கைவேலிப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளபோதும் இன்று வரை மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தி இருந்ததோடு இராணுவம் மிக விரைவாக தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதிகாரிகள் தமது காணிகளை விரைவில் பெற்றுத்தர வேண்டும் எனவும் தாம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படட நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் குறித்த காணிகளில் பதினொரு ஏக்கர் காணி இன்று (28) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த ஒரு சிறு பகுதியை தவிர ஏனைய காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.