முல்லைத்தீவு மாவட்டம் – புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன், அடிகாயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பொலிஸ் விசாரணைகளில் தான் கடத்தப்பட்ட வாகனத்தில் மேலும் இரு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தப்பி வந்த மாணவன் பரபரப்பு வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்றையதினம் சனிக்கிழமை (19-03-2022) மாலை தனியார் வகுப்பொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேளை, ஆள் நடமாற்றம் அற்ற பகுதியில் வைத்து வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டான்.
மாணவனை கடத்தி சென்ற வான் காட்டு பகுதி ஊடாக சென்ற போது, வானில் இருந்து பாய்ந்த மாணவன், காயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ளார்.
பின்னர் காயங்களுடன் தப்பியோடி வந்த மாணவனை உறவினர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாரிடம், தான் கடத்தி செல்லப்பட்ட வாகனத்தில் ஏற்கனவே தன் வயதை ஒத்த இரு சிறுவர்கள் கைகள், கால்கள் கட்டப்பட்டு, வாயிற்கு பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் வாகனத்தில் காணப்பட்டதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.