யாழ் நகரப்பகுதிகளில் மின்சார சிக்கனம் என்ற போர்வையில் மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடமாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் மாநகர சபையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் உள்ளுராட்சி மன்றங்களில் மின்சார சிக்கனத்தைப் பேணுமாறு சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளூராட்சி மன்றங்களுக்கு வீதி மின்விளக்குகளின் மின்சார சிக்கனத்தைப் பேணுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ் நகரப் பகுதிகளில் ஐந்துக்கு மேற்பட்ட எரிபொருள் நிலையங்கள் மற்றும் மொத்த வியாபார வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன நிலையில் மக்கள் இரவு நேரங்களில் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
ஏனெனில் எரிபொருளுக்காக மக்கள் இரவு நேரங்களில் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் வீதி மின் விளக்குகளை அணைக்கும்போது வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது. நாட்டில் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைப்படி நிர்வாகங்களை நடத்துவதால் தேவையற்ற முடிவுகளைத் தேவையற்ற நேரங்களில் மேற்கொள்கிறார்கள்.
அமைச்சர்கள் மற்றும் அரசாங்க பிறவிகள் தமது சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்ற நிலையில் சாதாரண மக்களை நெருக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.
எரிபொருள் விலையேற்றம் சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு என மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்ற நிலையில் மின்சாரத்தையும் துண்டித்து அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது.
யாழ் நகரப் பகுதிகளில் பல மின் விளக்குகள் துண்டிக்கப்பட்டதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை மீளப் பொருத்துவதற்கு வடமாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்க வேண்டும்.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றை அனுப்புவதற்குத் தயாராக இருக்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்