மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளரை இடமாற்றக் கோரி மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆதி அருணாச்சலம் தலைமையில் சபை உறுப்பினர்களால் இன்றைய தினம் (27) காலை 11 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளரின் ஆளுமையற்ற செயற்பாட்டாலும், வினைத்திறன் அற்ற முடிவுகளாலும் அபிவிருத்திகள் மற்றும் வேலை திட்டங்கள் அனைத்தும் பின் நோக்கி காணப்படுவதாகவும் எழுத்து மூல செயற்பாடுகள் மட்டுமே இடம்பெறுவதாகவும் பௌதீக செயற்பாடுகள் எவையும் இடம் பெறுவதில்லை எனவும் கோரி இன்றைய தினம் (27) காலை மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக கொள்வனவுகள், எரிபொருள் விற்பனைகள் என்பவற்றில் ஊழல் மேற்கொண்டுள்ளதாகவும் அதை உறுப்பினர்கள் உறுதிப்படுத்தி வழங்கியதாகவும் ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு பகுதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் சபை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக பல முறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்கள் இடம் மாற்றம் செய்வதாக கோரியும் இதுவரை இடமாற் செய்யவில்லை என்றும், விரைவில் புதியதொரு ஆளுமையுள்ள பிரதேச சபை செயலாளர் ஒருவரை நியமிக்குமாறும் அவ்வாறு நியமிக்காத பட்சத்தில் இன்னும் பல போராட்டங்களை மேற்கொள்ள தாங்கள் தயாராக உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.