தலை மன்னாரில் இருந்து நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணி அளவில் கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவைக்கான பேருந்தில் சுமார் 250 கிராம் எடை கொண்ட ´ஐஸ்´ ரக போதைப் பொருளை தம் வசம் மறைத்து வைத்திருந்து கடத்திச் செல்ல முற்பட்ட புத்தளம், மற்றும் சிலாவத்துறை பகுதிகளைச் சேர்ந்த 2 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் நகரின் பிரதான வீதி பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பொலிஸார் குறித்த பேருந்தில் சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த இரு சந்தேக நபர்களும் ஐஸ் ரக போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டார மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமாரபள்ளேவள,உப பொலிஸ் பரிசோதகர்களான ராமநாயக்க ,வணசிங்க தலைமையிலான அணியினரே மேற்படி ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றி உள்ளனர்.
மேற்படி கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.