நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுக்கு இணையாக அனுமானங்களின் அடிப்படையிலான கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வெளியானமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அந்த ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதானிகள் இன்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு என்பன ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்தநிலையில், பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில், தமது தரப்பு மிகுந்த அவதானம் செலுத்தவுள்ளது.
அத்துடன், ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில்,
அதனைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய பிரச்சினைக்குரிய தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.