லண்டனில், ஒரு வெள்ளையின தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது… ஆனால், அந்த குழந்தை தந்தையைப்போலவோ தாயைப்போலவோ இல்லை… சுருள் முடியுடன், பழுப்பு நிறக்கண்களுடன் பிறந்த அந்த குழந்தையைப் பார்த்த யாரும், முதல் பார்வையிலேயே அது ஒரு கருப்பினக் குழந்தை என்று தெளிவாக கூறிவிடுவார்கள்.
ஆனால், குழந்தையைக் கண்ட அந்த தந்தை, Jim Lawton அவர் பெயர், குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டார், என் செல்வ மகளே என அவளைக் கட்டியணைத்துக்கொண்டார்… அந்த அன்பு, அவர் தனது 55ஆவது வயதில் புற்றுநோயால் இறக்கும் வரை, கொஞ்சம் கூட குறையவில்லை.
ஆனால், சமுதாயத்தின் கண்கள் எதையும் தெளிவாகப் பார்க்குமே! சிறுவயது முதலே தனது நிறம் குறித்த பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டுவந்த அந்த குழந்தை, அவளது பெயர் Georgina Lawton, (அப்பா அம்மாவைப் பொருத்தவரை அவளது செல்லப்பெயர் ஜினா), உயர்நிலைப் பள்ளிக்கு வரும்போது, ஒரு ஆசிரியை வெளிப்படையாகவே ஜினாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
நீ தத்தெடுக்கப்பட்ட குழந்தையா அல்லது உன் பெற்றோருக்கு யாருடனாவது தவறான உறவு இருந்ததா, என மற்ற மாணவ மாணவியர் முன் அந்த ஆசிரியை ஜினாவை சீண்ட, கண்ணீருடன் வீடு வந்த ஜினா பெற்றோர் முன் கண்ணீர் வடிக்க, அவர்கள் அவளது ஆசிரியை மீது கோபப்பட்டார்கள்.
தங்கள் மூதாதையரில் ஒருவருடைய ஜீன் காரணமாகவே ஜினா இப்படி இருப்பதாக அவர்கள் விளக்கினார்கள்.
என்றாலும் வளர வளர ஜினா ஒரு வித்தியாசத்தை கவனித்தாள். ஒரு இளம்பெண்ணாக மாறிய நிலையில், அவளிடம் கருப்பினத்தவர்கள் அதிகம் வந்து பேசுவதை அவள் கவனித்தாள்.
தனது பெற்றோரின் அன்பில் திளைத்து வாழ்ந்ததால், அந்த நினைவுகள் அவளை மேற்கொள்ளாத நிலையில், ஜினாவின் தந்தை தனது 55ஆவது வயதில் இறந்துபோனார்.
அந்த நாள் ஜினாவின் வாழ்வில் மிகப்பெரிய துக்கநாள் என்று அவள் நினைத்தாள்… ஆனால், அதைவிட பெரிய ஒரு அதிர்ச்சி அவளுக்கு காத்திருந்தது.
Jim இறக்கும் முன், மகளுக்கு DNAசோதனை ஒன்று செய்வதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் உயிருடன் இருக்கும்போது அப்படி செய்வது தன் தந்தையின் அன்பை அவமதிக்கும் செயல் என்று எண்ணி ஜினா அதை செய்யவில்லை. ஆனால், அவர் இறந்தபிறகு, ஜினா DNA பரிசோதனை செய்துகொண்டாள்.
DNA பரிசோதனையில் வந்த முடிவு அப்படியே ஜினாவை ஆட்டம் காணவைத்துவிட்டது, ஆம், Jim, ஜினாவின் தந்தை என்பதற்கு ஒரு சதவிகிதம் கூட ஆதாரம் இல்லை! கலங்கிக் கதறிக் கண்ணீர் விட்டழுத பிறகு, முதன் முறையாக தனது தாய் மீது கோபம் வந்தது ஜினாவுக்கு. ஜினாவின் தாய் பெயர் Colette.
இது எப்படி நடந்தது என கண்ணீரும் கோபமுமாக ஜினா கதற, முதலில் சோதனையில் ஏதோ தவறு இருக்கும் என கூறிய Colette, பிறகு உண்மையை ஒப்புக்கொண்டார்.
ஒரு நாள் இரவு, மதுபான விடுதிக்கு சென்றிருந்தபோது ஒரு கருப்பின மனிதனை சந்தித்தேன், அதற்கு மேல் எனக்கு ஞாபகம் இல்லை என கூனிக்குறுகி Colette கூற, ஜினாவுக்கு ஆத்திரம் வந்ததுடன் கூடவே இன்னொரு நினைவு மின்னலாகத் தாக்கியது.
தன் தாயும் தந்தையும் வெள்ளையினத்தவர்கள், தானோ பார்க்கும்போதே கருப்பினத்தவள் என தெளிவாக தெரிகிறது. ஆனாலும் தன் தந்தை தன் மீது எவ்வளவு அன்பு காட்டினார், தன் மீது மட்டுமல்ல, தன் தாயையும் அவர் எவ்வளவு நேசித்தார் என்ற எண்ணம் வந்தபோது, உண்மையில் தன் தந்தை யார் என அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் கூட மங்கலாக ஆரம்பித்துவிட்டது.
இதில் இன்னொரு முக்கிய விடயம், தன் தந்தையும் தாயும் மட்டுமல்ல, தன் மாமாக்கள், அத்தைகள், சித்தப்பா சித்திகள், ஏன், தாத்தா பாட்டிகள் கூட இதுவரை ஒருமுறை கூட தன் நிறத்தைக் குறித்து பேசியதில்லை என்று உணர்ந்தபோது, அதுவும் தன் தந்தை இறக்கும்போது தன் உறவினர்களிடம் இதுகுறித்து ஜினாவிடம் பேசக்கூடாது என அன்புக் கட்டளையிட்டுவிட்டு இறந்திருக்கிறார் என்று அறிந்துகொண்டபோது, ஜினாவுக்கு அப்பா மீது இருந்த அன்பு இன்னும் பல மடங்கு அதிகமாயிற்று. ஜினா இன்றுவரை தன் உண்மையான தந்தையை கண்டுபிடிக்கவில்லை.
சொல்லப்போனால், அது தேவையில்லை என்று கூட சில நேரங்களில் ஜினாவுக்கு தோன்றுகிறது. காரணம், தனது அப்பா Jimதான் என்ற எண்ணத்தை, அது கொஞ்சமும் குறைத்துவிடக்கூடாது என்று அவர் கருதுகிறார்.