பிரித்தானியாவில் யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை இரத்து செய்யுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் புயல் தாக்கியதையடுத்து பல்வேறு இடங்களிலும் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, பாடசாலைகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டன.
பேருந்து மற்றும் ரயில் சேவைகள், விமானங்கள் மற்றும் படகுப் பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மீட்பு பணிகளுக்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மொத்தம் 2 இலட்சம் வீடுகளில் மின்சாரம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயலர் ஜார்ஜ் யூஸ்டிஸ் கூறுகையில், ஏற்கனவே 250,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகளை வழங்க குழுக்கள் கடுமையாக உழைத்து வருகின்றன.
அந்த புயல் வடக்கு கடலை நோக்கிச் சென்றாலும், பிரித்தானியாவில் சில பகுதிகளில் வானிலை எச்சரிக்கைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை 1 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு சனிக்கிழமை (19-02-2022) காலை வரை உறைபனி வெப்பநிலை மற்றும் பனிக்கட்டி அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மஞ்சள் எச்சரிக்கை 2 மண்டலங்களுக்குள் இருப்பவர்கள் கடுமையான பனி மற்றும் பலத்த காற்றின் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மஞ்சள் எச்சரிக்கை 3ன் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு பலத்த காற்று மாலை வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரித்தானியாவின் தெற்கில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் வலுவான காற்று காரணமாக இன்று மாலை வரை தற்போது அம்பர் எச்சரிக்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனிஸ் புயல் தாக்கியதால் வில்ட்ஷயர், பிராட்ஃபோர்ட்-ஆன்-அவான் என்ற இடத்தில் கார் மீது மரம் வீழ்ந்ததில் மூன்று பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவசரகால பணியாளர்கள் 12.20 மணியளவில் குழுவை மீட்டனர். சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குறித்த வீதி சில மணித்தியாலங்களுக்கு மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கென்ட் நகரில் மின் நிலைய கோபுரம் பாதிப்பு கென்ட்டில் உள்ள மின் நிலையத்தில் உள்ள ஒரு கோபுரம் யூனிஸ் புயலின் போது சேதமடைந்து இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது.
இருப்பினும், உயிர் சேதம் ஏற்படவில்லையெனவும், உள்ளூர் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. “தளத்தில் சில சேதங்களை ஏற்படுத்தியுள்ளது மற்றும் முன்னெச்சரிக்கையாக மின் நிலையம் தற்காலிகமாக ஆஃப்லைனில் விடப்பட்டுள்ளதாக” அறிவிக்கப்பட்டுள்ளது