பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ அருகே A66 வீதியில், காவல்துறை வாகனம் மீது எதிர்த்திசையில் வந்த கார் மோதிய விபத்தில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மிட்ல்ஸ்பரோவிற்கு அருகிலுள்ள சவுத் பேங்க் பகுதியில், தவறான திசையில் வந்த வோக்ஸ்வேகன் பாசாட் கார் ஒன்றை அதிகாரிகள் துரத்திச் சென்றுள்ளனர்.
அப்போது, பணியில் இருந்த காவல்துறை வாகனம் மீது அந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
அதிகாலை 3.40 மணியளவில் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து அவசர உதவிப் படையினர் விரைந்தபோதிலும், இரு வாகனங்களிலும் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த காவலர்துறை அதிகாரிகள், 37 வயதான மேத்யூ பிளேட்ஸ் மற்றும் 38 வயதான டாம் க்ளஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கிளீவ்லேண்ட் காவல் துறைத் தலைவர் விக்டோரியா ஃபுல்லர் தெரிவித்துள்ளார்.
அதன்போது, காவல்துறை வாகனம் சரியான திசையிலேயே பயணித்ததாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்
இந்த சம்பவம் குறித்துக் காவல்துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம் (IOPC) விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் விபத்தைத் தொடர்ந்து, நார்மன்பி வீதிக்கும் சர்ச் லேனுக்கும் இடைப்பட்ட A66 வீதி தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு காவலர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைவதாகப் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.

