பிரித்தானியாவில் இலங்கையை பின்புலமாககொண்ட விஞ்ஞானி கலாநிதி நடராஜா முகுந்தன் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விஞ்ஞானி கலாநிதி நடராஜா முகுந்தன் (Dr. Nadaraja Mukundan), 47, அவரது மனைவி ஷர்மிளா(Sharmila), 42, மற்றும் அவர்களின் 13, ஒன்பது மற்றும் ஐந்து, வயதுடைய மூன்று குழந்தைகள் ஆகியோரே ,இந்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த 2018 இல் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மெல்லிய பட ஒளிமின்னழுத்த சாதனங்களின் உற்பத்திதுறையில் பணிபுரிய முகுந்தனுக்கு வழங்கப்பட்ட அனுமதியால் அவர் இங்கிலாந்துக்கு வந்தார்.
அதோடு பொதுநலவாய திட்டமொன்றின்மூலம் இங்கிலாந்துக்கு வந்து ஆராய்ச்சி செய்து பணியாற்ற அவருக்கு அனுமதி கிடைத்தது. அவரது மனைவி முதியோர் இல்லத்தில் வயதானவர்களைப் பராமரிக்கும் வேலையைப் பெற்றார்.
நவம்பர் 2019 இல், முகுந்தன் தனது நோய்வாய்ப்பட்ட தாயைப் பார்க்க ஒரு குறுகிய பயணமாக தனது சொந்த நாடு திரும்பிய நிலையில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.
அதன்பின்னர் அவர் அங்கிருந்து தப்பி இங்கிலாந்துக்கு மீண்டும் திரும்பினார். இதனையடுத்து இலங்கை வந்தபோது அனுபவித்த அனுபவத்தின் அடிப்படையில் தஞ்சம் கோரினார்.
இந்த நிலையில் பெப்ரவரி 2020 இல் அவரது உதவித்தொகை காலாவதியான பிறகு, அவரும் அவரது மனைவியும் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
முகுந்தனின் புலமைப்பரிசில் விசா முதலில் காலாவதியானபோது, முதியோர் இல்ல மேலாளர் ஷர்மிளாவை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிய போதிலும், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.