இலங்கையின் பல பகுதிகளில் இன்று பரவலான மழையுடன் கூடிய வானிலை, பலத்த காற்று மற்றும் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது
இடியுடன் கூடிய மழை
சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

