ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் துணிகளை உலர வைக்காததால் மனைவியை அடித்து கொன்ற சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் அசோகன். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
ராணுவத்தில் இருந்து அசோகன் ஓய்வுபெற்றிருந்தாலும், வீட்டிலும் ராணுவ ஒழுக்கத்தை கடைபிடிக்க சொல்லி குடும்பத்தினரை வலியுறுத்தி வந்துள்ளார்.
இதனால் அவ்வப்போது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
துணிகளைத் துவைத்த ஜெயந்தி, அவற்றை உலர வைக்காமல் வேறு பணிகளை செய்துள்ளார். அதை கவனித்த அசோகன் ஏன் துணியை உலர்த்தவில்லை என்று கேட்டு சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் . ஆத்திரமடைந்த அசோகன் மனைவியை முதுகில் கடுமையாக தாக்கியுள்ளார்.
கணவன் தாக்கியதால் நீண்டநேரம் அழுத, ஆஸ்த்துமா நோயாளியான ஜெயந்திக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது.
மயக்கமடைந்த ஜெயந்தியை மீட்ட மகள்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் ஜெயந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
மகள்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அசோகன் மீது கொலைவழக்குப் பதிவு செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.