-வியாழேந்திரன்
மாவீர நாளில் பேஸ்புக்கில் பதிவிட்டவர்கள் சிறையில் உள்ளார்கள் இவர்களை உசுப்பேத்தியவர்கள் இன்று அரசாங்க பாதுகாப்புடன் திரிகிறார்கள் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட முறாவோடை ஏழாம் குறுக்கு வீதியை கொங்கிறீட் வீதியாக புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கும் பட்சத்தில் மாவட்டத்தில் வறுமையை இல்லாது ஒழிக்க முடியும். தமிழ் மக்களுடைய கண்ணீரையும், பிரச்சினைகளையும் வைத்துக் கொண்டு காலா காலமாக தமிழ் மக்களின் கல்லறைகளில் நின்று கொண்டு செய்கின்ற பிழைப்புவாத அரசியலை வங்குரோத்து அரசியலை நாங்கள் தொடர்ந்து செய்ய முடியாது.
ஆகவே மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுபவர் தான் அந்த மக்கள் தலைவனாக இருக்க முடியும். தேர்தல் காலங்களில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். முப்பது வருடம் இடம்பெற்ற யுத்தத்தின் இழப்பை நான்கு மாதத்தில் நிறைவு செய்ய முடியாது. நாங்கள் கட்டடம் கட்டடமாக வேலைத் திட்டங்களை செய்து முடிப்போம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கம் சார்பாக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் ஊடாக ஆயிரத்து இருநூறு பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேரும் இல்லாது விட்டிருந்தால் இந்த வேலை குறைவாக கிடைத்திருக்கும்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சியோடு இருந்த படியினால் அவர்கள் பகுதிகள் வளமாக காணப்படுகின்றது. கடந்த காலத்தில் அவர்கள் அபிவிருத்திக்காக போராடி எந்த உரிமையும் இழந்ததாக நான் பார்க்கவில்லை. ஆனால் எமது சமூகத்தில் உரிமையும், அபிவிருத்தியும் இல்லை. இருக்கின்றவர்களை அழிக்கின்ற வேலைத் திட்டத்தினை எமது தமிழ் அரசியல்வாதிகள் கையில் எடுத்துள்ளார்கள்.
தமிழ் தேசியம் தடம் மாறலாம். ஆனால் தடம் புறளக்கூடாது. சாத்வீக போராட்டம், ஆயுதம் போராட்டம் இடம்பெற்றது. தற்போது அரசியல் போராட்டம் உள்ளது. இந்த போராட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். பல பிரச்சனைக்கு மத்தியில் வாழ்ந்த எமது தமிழ் சமூகத்தை மீண்டும் பிரச்சினைக்குள் மாட்டி விடுகின்ற வேலைத் திட்டத்தை செய்ய முடியாது.
இப்போது இருக்கும் தலைமுறையாவது நிம்மதியாக சந்தோஷமாக இழப்புக்களை சந்திக்காமல் வாழ வேண்டும். 2009ம் ஆண்டு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் மக்களுக்காக போராடவுமில்லை. ஆயுத களத்தில் இறங்கவுமில்லை. அவர்கள் குடும்பத்தோடு மாறிவிட்டார்கள். இன்று உசுப்பேத்துகின்ற, உணர்ச்சி வசப்படுத்துகின்ற அரசியலை செய்ய முடியாது. அது எமது சமூகத்தைப் பாதிக்கும்.
மாவீர நாளில் பேஸ்புக்கில் பதிவிட்டவர்கள் சிறையில் உள்ளார்கள் இவர்களை உசுப்பேத்தியவர்கள் இன்று அரசாங்க பாதுகாப்புடன் திரிகின்றார்கள். ஆனால் இவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் சிறைச்சாலை சென்று வருகின்றார்கள் என்றார்.
இராஜாங்க அமைச்சரின் வாழைச்சேனை இணைப்பாளர் எஸ்.மன்மதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மிராவோடை ஏழாம் குறுக்கு வீதியானது இரண்டு கோடியே அறுபது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் ஒரு கிலோ மீற்றர் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.