இந்த ஆண்டின் கடைசி பகுதி சூரிய கிரகணம், 25ல் நிகழ உள்ளது. தமிழகத்தில் சில நிமிடங்கள் மட்டுமே அதை பார்க்க முடியும்.
இது தொடர்பில், தமிழக அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் சவுந்தராஜ பெருமாள் கூறியதாவது,
பூமியானது சூரியனைச் சுற்றி வரும் பாதையை உள்ளடக்கிய தளம், ‘எக்லிப்டிக்’ என அழைக்கப்படுகிறது. நிலவு பூமியை மற்றொரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.
ஆனால், பூமி சூரியனை சுற்றி வரும் தளத்தில், நிலவு பூமியைச் சுற்றி வருவதில்லை. ஒவ்வொரு சுற்றின்போதும் நிலவு, ‘எக்லிப்டிக்’ தளத்தை இருமுறை சந்திக்கும்.
சில நேரங்களில் பூமியையும், சூரியனையும் இணைக்கும் கற்பனையாக நேர்க்கோட்டில் நிலவு, ‘எக்லிப்டிக்’ தளத்தை கடக்கும்போது மட்டும், சூரிய கிரஹணம் நிகழ்கிறது.
பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியனும், நிலவும் அளவில் ஒத்திருப்பது போல காணப்படும். இந்த தோற்ற அளவுகள் பூமியில் இருந்து, அவற்றின் தொலைவுகளைப் பொறுத்தது.
சூரியன், நிலவை விட, 400 மடங்கு பெரிதாகவும், தொலையில் இருப்பதாலும் பூமியில் இருந்து காணும்போது சூரியனும், நிலவும் ஒரே அளவாக தோன்றும்.
பூமியை நிலவு சுற்றும் பாதை, ‘எக்லிப்டிக்’ தளத்தில் இருந்து சாய்கோணத்தில் இல்லாமல் இருந்திருந்தால், ஒவ்வொரு அமாவாசையின்போதும் சூரிய கிரகணம் நிகழ்ந்திருக்கும்.
சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இந்த நிழல் இரண்டு பகுதிகளை கொண்டது. ஒன்று முழு நிழல் பகுதி; மற்றொன்று புறநிழல் பகுதி.
முழுநிழல் பகுதியில் இருக்கும் ஒருவரால் சூரியணை காண முடியாது. அதை நிலவு முழுமையாக மறைத்து விடும். இது முழு சூரிய கிரகணம். புறநிழல் பகுதியில் சூரியனின் ஒரு பகுதியில் இருந்து வரும் ஒளி மட்டும் தெரியும்.
எனவே, புறநிழல் பகுதியில் இருக்கும் ஒருவர், சூரியனின் ஒரு பகுதியை மட்டும் காண முடியும். இது பகுதி சூரிய கிரகணம்.
இதுபோன்ற ஒரு பகுதி சூரிய கிரகணம் தான், எதிர்வரும் 25ம் திகதி நிகழவுள்ளது. உலக அளவில் சூரிய கிரகணம், 25ம் திகதி மாலை, 2:19 மணிக்கு துவங்கி, மாலை 6:32 மணிக்கு முடியும்.
உலகின் எந்த பகுதியிலும் முழு சூரிய கிரகணம் நிகழாது. ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் சூரியனை, 80 சதவீதம் நிலவு மறைக்கும்.
ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில், இந்த பகுதி சூரிய கிரகணத்தை காணலாம்.
சூரிய மறைப்பு
சென்னையில் இந்திய நேரப்படி மாலை, 5:14 மணிக்கு சூரிய கிரகணம் லேசாக ஆரம்பிக்கும். மாலை 5:44 மணிக்கு முடிந்து விடும். ஏனென்றால், அன்று சூரியன் மாலை, 5:44 மணிக்கு மறையும். இங்கு அதிகபட்சமாக, எட்டு சதவீதம் மட்டும் சூரியன் மறைப்பு இருக்கும்.
எனவே, மேற்கு வானில் சூரியன் மறையும் முன், இந்த நிகழ்வு நடக்கிறது. சூரிய கிரகணம் ஆரம்பிக்கும்போது, தொடுவானில் இருந்து ஏழு டிகிரி உயரத்தில் மட்டுமே சூரியன் காணப்படும். இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள நகரங்களில் இந்த நிகழ்வை காணலாம்.
தமிழகத்தில் இதற்கு முன், 2020 ஜூன் 21ல் கங்கண சூரிய கிரகணம் காண முடிந்தது. மீண்டும், 2027ம் ஆண்டு ஒகஸ்ட், 2ல் தமிழகத்தில் பகுதி சூரிய கிரகணம் காணலாம்.
எதிர்வரும், 25-ம் திகதி நிகழவுள்ள சூரிய கிரகணம் சில நிமிடங்கள் சூரிய மறைவின்போது நிகழ்வதால், சென்னை பிர்லா கோளரங்கில் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.