சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்புச்சீட்டாக இலங்கையைப் பயன்படுத்தியிருக்கின்றதாக இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்புப் பிரதி ஆலோசகர் பங்கச் ஷரன்(pankaj saran) கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக சீனாவினால் பின்பற்றப்பட்டுவந்த கொள்கையே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றதாகவும் அவர் (pankaj saran) சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன உளவுக்கப்பல் விவகாரம்
அண்மைக்கால இராஜதந்திர விவகாரங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த வார இறுதியில் மிகவும் காட்டமான கட்டுரையொன்றை வெளியிட்டிருந்த இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங்,
‘வெளிநாடொன்றின் கப்பலை அதன் கோரிக்கைக்கு அமைவாக அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குள் அல்லது வேறு துறைமுகத்திற்குள் அனுமதிப்பது என்பது தமது இறையாண்மைக்கு அமைவாக முற்றுமுழுதாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமேயாகும் என்று அக்கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதுமாத்திரமன்றி எவ்வித ஆதாரங்களுமின்றி ‘பாதுகாப்புசார் கரிசனைகள்’ என்று கூறிக்கொண்டு வெளியகத்தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட இடையூறுகள் இலங்கையின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றின்மீது ஏற்படுத்தப்பட்ட தலையீடு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.
சீனாவுக்கு பதிலடி
இந்நிலையில் இலங்கைக்கான சீனத்தூதுவர் கருத்துக்குப் பதிலடி வழங்கியிருந்த இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், இலங்கைக்கான சீனத்தூதுவரின் இந்தியா மீதான பார்வை அவரது சொந்த நாட்டின் நடத்தையின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்றும் ஆனால் இந்தியா அவ்வாறானதொரு நாடல்ல என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்தியா – இலங்கை நல்லுறவு
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்புப் பிரதி ஆலோசகர் பங்கச் ஷரன் (pankaj saran) ,
‘கடந்த சில வருடங்களாக சீனாவினால் பின்பற்றப்பட்டுவந்த கொள்கைகளே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம். இந்த உண்மையைக் கருத்திற்கொண்டு இலங்கை மீதான கருணையை வெளிப்படுத்தி இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடக்கூடிய தன்மையை சீனா கொண்டிருக்கின்றது என்பது மிகமுக்கியமானதாகும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ‘சீனா ஒரு பெரும் விளையாட்டுக்குரிய துருப்புச்சீட்டாக இலங்கையைப் பயன்படுத்தியிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் மிக நீண்டகாலமாகவே இலங்கையுடன் இந்தியா நல்லுறவைப் பேணிவந்துள்ளது.
அத்துடன் அது எதிர்வருங்காலங்களிலும் தொடரும். எமது அயல்நாடுகளைக் கையாள்வதில் நாம் வேறுவிதமான அணுகுமுறையைக் கொண்டிருக்கின்றோம்’ என்றும் பங்கச் ஷரன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது