லண்டனில் சிறுமிகளை குறிவைத்து மோசமாக நடந்து கொள்ளும் நபரை பொறி வைத்து சிலர் பிடித்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.சைமன் லேண்ட்ஸ்பெர்க் (68) என்பவர் ஏற்கனவே சில சிறுமிகளிடம் கவர்ந்து பேசி தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கடந்த 2017ல் சிறை தண்டனை பெற்றார்.
இந்த நிலையில் கடந்தாண்டு ஜூன் மாதம் 14 வயது சிறுமிகள் சிலரிடம் ஓன்லைன் மூலம் சைமன் நட்பானார்.தனக்கு 43 வயது தான் ஆகிறது என பொய்யாக கூறி மிகவும் மோசமான முறையில் அவர்களிடம் உரையாடியிருக்கிறார்.
பின்னர் அவர்களை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட சைமன் அஸ்புர்டன் பூங்காவுக்கு சிறுமிகளை வர சொன்னார். அங்கு அவரும் சென்ற நிலையில் சிலர் சைமனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதனால் சைமன் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரால் அங்கிருந்து தப்ப முடியவில்லை.அப்போது தான் சைமனிடம் சிறுமிகள் போல பேசியது அந்த நபர்கள் என தெரியவந்தது.
சைமனின் மோசமான குணத்தை கண்டுபிடித்த அவர்கள் இந்த திட்டத்தை போட்டு அவரை பிடித்துள்ளனர்.பின்னர் பொலிசில் ஒப்படைக்கப்பட்ட சைமன் மீது Croydon Crown நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.நீதிபதி ஆடம் ஹிடஸ்டன் கூறுகையில், சிறுமிகள் என நினைத்து ஓன்லைனில் மிகவும் ஆபாசமாக சைமன் பேசியிருக்கிறார்.
அவரின் செயல்கள் மற்றும் நடத்தைகள் ஆபத்தானவை என்பதில் சந்தேகமில்லை.ஏற்கனவே இது போன்ற குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்றும் அவர் மீண்டும் அதே செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும் செல்போன் மற்றும் கணினியில் அவர் பேசிய தகவல்கள் இருந்தன, அதையெல்லாம் அழித்துள்ளார்.சைமனுக்கு 44 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் புதிய பாலியல் தீங்கு தடுப்பக்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.