வவுனியாவில் பெரும்பான்மை இன இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியைச் சேர்ந்த 18 வயது இளம் யுவதியை பெற்றோர் பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான குறித்த இளைஞனும், மல்லாவியைச் சேர்ந்த 18 வயதான தமிழ் யுவதியும் காதலித்து, கடந்த யூலை மாதம் வவுனியாவில் பதிவுத் திருமணம் செய்துள்ளனர்.
அவர்கள் இருவரும் திருமணத்தின் பின் தேக்கவத்தையிலுள்ள கணவன் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (22) வாகனமொன்றில் அங்கு சென்ற பெண்ணின் பெற்றோர்கள், யுவதியை பலவந்தமாக வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகின்றது.
அதன்போது யுவதியை கூட்டிச்செல்வதை தடுக்க முயன்ற கணவனின் தந்தையையும் அவர்கள் தாக்கியுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் மல்லாவிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மல்லாவி பொலிஸார் பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.