இலங்கையில் எரிபொருளுக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் ஒருவரின் மோசடி , தலையணி கீழே விழுந்ததால் அவரது மோசடி அம்பலமாகியுள்ளது.
பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக கர்ப்பிணிபோல் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு பெண் ஒருவர் வந்துள்ளார்.
பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வாகனங்கள் ஒரு வரிசையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றுமொரு வரிசையிலும் நிறுத்தப்பட்டிருந்தன.
இதற்கும் மேலதிகமாக சுகாதார சேவை ஊழியர்கள்,வைத்திய அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மாருக்காக தனியான வரிசையொன்றும் காணப்பட்டது.
இதை பயன்படுத்திக் கொண்ட அப்பெண் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு கர்ப்பிணியைபோல் வந்து எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளார்.
எரிபொருளை பெற்றுக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பிரதான வீதிக்கு வந்து வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளை திருப்பும் போது அவர் தவறி விழுந்ததில் வயிற்றில் கட்டி இருந்த தலையணையும் கீழே விழுந்துள்ளது.
சம்பவத்தை பார்த்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அந்த இடத்துக்குச் சென்று பெண்ணை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவத்தை அடுத்து அந்தப் பெண் வெட்கத்தில் கூனிக்குறுகியபடி தலையணையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.