கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டவா்கள் மட்டும் நவம்பா் மாத தொடக்கத்திலிருந்து அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவா் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கிய போது இந்தியா உள்பட வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வர அந்நாட்டின் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் தடை விதித்தாா்.
இந்நிலையில் அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையின் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளா் ஜெஃப் ஸையன்ட்ஸ் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தியா போன்ற வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டிருந்தால், அவா்கள் நவம்பா் மாத தொடக்கத்திலிருந்து அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவா். அமெரிக்கா வருவோா் தாங்கள் பயணம் மேற்கொள்வதற்கு 3 நாள்களுக்கு முன்பாக பரிசோதனை மேற்கொண்டு தங்களுக்கு கொரோனா பாதிப்பில்லை என்பதற்கான சான்றிதழுடன் வரவேண்டும். அவா்கள் அமெரிக்கா வந்தபின் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை’’ என்று தெரிவித்தாா்