தொலைக் கல்வி வலுவூட்டல் செயற்றிட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக் கல்வி மத்திய நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வு இன்று (9) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஜனாபதியின் ஆலோசனைக்கமைய கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக் கழகம் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு அமைச்சின் புதிய கல்வி சீர்திருத்த முன்மொழிவினை நடைமுறைப்படுத்துவதற்கு இணைவாக தொலைக் கல்வி வலுவூட்டல் செயற்றிட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக் கல்வி மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது கற்கை நிலையம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கானது ஓட்டமாவடி பாத்திமா பாலிகா தேசிய பாடசாலை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் வைத்தியர் ஜெய்யித் உமர் மௌலானா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஜே.எப்.றிப்கா, ஜே.தாஜுன் நிசா, எம்.எச்.எம்.ரமீஸ், பெருந்தோட்ட துறை இராஜாங்க அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பு செயலாளர் கலாநிதி எம்.பி.முஸம்மில், வாழைச்சேனை பொலிஸ் உத்தியோகத்தர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக் கல்வி மத்திய நிலையத்திற்கு தனவந்தர் ஒருவரினால் அமைத்து தரப்பட்ட குடிநீர் திட்டம் திறந்து வைக்கப்பட்டதுடன், தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக் கல்வி செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக் கழகம் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு அமைச்சின் எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக் கல்வி மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
பல்கலைக் கழகம் செல்ல முடியவில்லை என்ற கவலையை விடுத்து தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக் கல்வி மத்திய நிலையத்தின் மூலம் கல்வி பயிலும் மாணவர்களும் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்ய முடியும். இந்த சந்தர்ப்பத்தினை அனைத்து மாணவர்களும் பயன்படுத்த வேண்டும் என்று மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் வைத்தியர் ஜெய்யித் உமர் மௌலானா இதன்போது தெரிவித்துள்ளார்