கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக மாவட்ட மேலதிக அரச அதிபர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாடசாலை அதிபர் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் அதிகளவானோர் உயிரிழந்திருக்கிறார்கள். குறிப்பாக நேற்றைய தினம் கூட கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்னால் பாடசாலை மாணவியொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற விபத்துக்களை தடுப்பது தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதத்திலும் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட தொழிற் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சட்ட வைத்திய அதிகாரி கல்விப் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாடசாலை அதிபர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தனர்.
எதிர்காலத்தில் விபத்துக்களை தடுக்கும் விதத்தில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த காலங்களில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொவிட் காரணமாக குறித்த செயற்பாடுகள் நடைபெறாத காரணத்தினால் இந்த விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளது.
எதிர்வரும் காலங்களில் இந்த விபத்துகளை தடுப்பதற்கு ஏற்ற விதத்தில் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அதிபர்கள் என பலர் அடங்கிய விதத்திலே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் இது தொடர்பாக இந்த விழிப்புணர்வை முன்னெடுப்பதற்கு ஆலோசனைகளை பெற்று எதிர்காலத்தில் இந்த விபத்துக்களை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை முன்னெடுக்கும் விதத்திலே குறித்த கலந்துரையாடல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.