கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் இன்று (07) அதிகாலை திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்புக் காரணமாக கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்து, வெள்ளக்காடாக மாறியது.
இதனால் கல்முனை மாமாங்க விநாயகர் கோவில் மற்றும் பாண்டிருப்பு விஷ்ணு கோவில் பகுதிகளும் பல வீடு, வளவுகளும் வெள்ளத்தில் மூழ்கி, பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
கடல் நீர் புகுந்தமையால், பிரதேச மக்கள் அச்சமும் கலவரமும் அடைந்த நிலையில், அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
கல்முனை மாநகர சபை உறுப்பினரான ஹென்றி மகேந்திரன், மாநகர மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியதையடுத்து, மாநகர சபையின் கனரக இயந்திரங்கள் மூலம் அப்பகுதிகளில் தேங்கியுள்ள கடல் நீரை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் அண்மைக் காலமாக கடலரிப்பு ஏற்பட்டு வருகின்றது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கரையோரம் பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அவசர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமெனக் கோரி, கல்முனை மாநகர சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.