நேபாளத்தின் மின்சார விநியோக கட்டமைப்பை மேம்படுத்தவும் வீதிகளை அபிவிருத்தி செய்யவும் அமெரிக்கா முன்வைத்த எம்.சீ.சீ.( Millennium Challenge Corporation) உடன்படிக்கையில் கைச்சாத்திட அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது சம்பந்தமாக நேபாள நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆளும் கட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக எம்.சீ.சீ உடன்படிக்கையில் நேபாளம் கையெழுத்திடுவது சுமார் ஒரு வருடகாலம் தாமதமானது. உடன்படிக்கையில் கையெழுத்திட அமெரிக்கா, நேபாளத்திற்கு வழங்கிய காலக்கெடு இன்று பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்தது.
நேபாளம் தற்போது எம்.சீ.சீ உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ளதால், அந்நாட்டுக்கு 500 மில்லியன் டொலர்கள் அன்பளிப்பாக கிடைக்கவுள்ளது. இது இலங்கை ரூபாய் பெறுமதியில் 100 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை.
இலங்கைக்கு நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்காக அமெரிக்காவுடன் எம்.சீ.சீ. உடன்படிக்கையில் கைச்சாத்திடும் வாய்ப்பு கிடைத்தது.
எனினும் தற்போதைய அரசாங்கம் அந்த உடன்படிக்கை தொடர்பாக போதிய அக்கறையை செலுத்தவில்லை என்ற காரணத்தினால், அமெரிக்கா அந்த திட்டத்தை கைவிட்டது.
இலங்கை இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால், 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைத்திருக்கும் என்பதுடன் அது நாட்டின் தற்போதைய பொருளதார நெருக்கடியில் உதவியாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.