உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவுள்ளது.
இதனால் இன்றைய தினம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பை வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பல விசேட பொலிஸ் குழுக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பே இன்றைய தினம் இவ்வாறு அறிவிக்கப்படவுள்ளது.
இன்று காலை புதுக்கடை மேல்நீதிமன்றத்தில் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இவ்வழக்கில் 2,309 முறைப்பாட்டாளர்கள் சாட்சியமளித்திருந்தனர்.
கடந்த ஒகஸ்ட் 24 ஆம் திகதி சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தது.

