உயரம் குறைவால் தமிழக இளஞர் ஒருவருக்கு தாய் நாட்டில் இராணுவமாகும் கனவு நிராசையான நிலையில், தற்போது உக்ரைன் நாட்டில் அது நிறைவேறியுள்ள நிலையில், அது பரவலாக பேசப்படுகின்றது.
கல்வி கற்பதற்காக உக்ரைனுக்கு சென்றிருந்த தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உக்ரைன் இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.
கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது. உக்ரைனில் நடக்கும் போரைத் தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடுகளின் வழியாக வெளியேறி வருகின்றனர். அத்துடன் இந்த போரினால் அங்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்களை மத்திய அரசுக் குழுவினர் ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ள மக்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்றலாம் என அந்நாடு அறிவித்தது. இதையடுத்து ஏராளமானோர் அந்நாட்டின் இராணுவத்துக்கு உட்பட்ட துணை இராணுவப் படைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தின் , கோவை துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த சாய்நிகேஷ் என்ற இளைஞரும் உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சாய் நிகேஷ்சுக்கு , இந்திய இராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்து இந்திய இராணுவத்தில் இணைய முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், 2 முறையும் உயரம் குறைவு காரணமாக அவர் தேர்வாகவில்லை என கூறப்படுகின்றது.
இதனையடுத்து, ஏரோ நாட்டிகள் எஞ்சினியரிங் படிக்கலாம் என முடிவெடுத்து, கடந்த 2019 ஆம் வருடம் உக்ரைனில் உள்ள கார்கிவ் நஷனல் ஏரோபோர்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
கடந்த ஜூலை மாத விடுமுறையின் போது இந்தியா வந்து சென்ற சாய் நிகேஷ், உக்ரைனுக்கு சென்றாலும் தினமும் பெற்றோரிடம் தவறாமல் பேசி வந்துள்ளார். கடந்த மாதத்தில் பெற்றோரிடம் தொடர்பு கொண்ட சாய் நிகேஷ், தனக்கு கேம் டெவலப்மென்ட் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் நடப்பு வருடம் ஜூலை மாதத்துடன் சாய் நிகேஷுக்கு படிப்பு நிறைவடையவிருந்த நிலையில்,
உக்ரைன் – ரஷியா போர் ஏற்பட்டதால் பெற்றோர் மகனை இந்தியா வருமாறு வலியுறுத்தியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த சாய் நிகேஷ், நான் வீடியோ கேம் நிறுவனத்தில் வேலைக்கு சேரவில்லை. இராணுவ ஆசை இருந்ததால், ஜோர்ஜியா நஷனல் லெஜியன் துணை இராணுவ பிரிவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதில் தான் பணியாற்றி வருகிறேன் என கூறியதுடன் , தற்போது ரஷ்யாவுக்கு எதிரான் போரில் பணியாற்றி வருவதாகவும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தனக்கு கல்வி வழங்கிய நாட்டுக்காய் ஆயுதமேந்தியுள்ள தமிழ்க வீரர் சாய் நிகேஷ்க்கு பலரும் பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.