இந்த ஆண்டின் இறுதியில் எல்-நினோ (El Niño) நிலைமையானது மிகவும் பலமிக்க எல்-நினோவாக மாறுவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் ஏற்பட்ட எல்-நினோ நிலைகளை விடவும் வலுவான எல்-நினோ நிலைமையே இவ்வருட இறுதியில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன,
“இந்த எல்-நினோ நிலைமையானது படிப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் மிகவும் வலுவான எல்-நினோவாக மாறுவதற்கான சாத்தியக்கூறு 90%-க்கும் அதிகமாக இருப்பதாகவே உலகளாவிய முன்னறிவிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த ஆண்டில் ஏற்படும் எல்-நினோ நிலைமையானது கடந்த 75 ஆண்டுகளில், அதாவது 1950 முதல் இதுவரை ஏற்பட்ட எல்-நினோ நிலைகளுடன் ஒப்பிடுகையில், அந்த அனைத்து எல்-நினோ நிலைகளையும் விட மிகவும் வலுவான எல்-நினோவாக மாறுவதற்கான சாத்தியக்கூறு தற்போது சுமார் 70% என முன்னறிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இதேவேளை, தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 37% வரை குறைந்துள்ளதால், நீரினை சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமானது என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) பொறியியலாளர் எச்.என்.பி.எஸ்.டி. ஹேரத் இது தொடர்பாகக் கூறுகையில்,
“நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் 74 பிரதான நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு தற்போது சதவீத அடிப்படையில் சுமார் 37% ஆக உள்ளது. தற்போதைய நீர் கொள்ளளவானது சிறுபோகச் செய்கைக்குப் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நவம்பர் – டிசம்பர் மாத மழையைப் பெறும் வரை இது போதுமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 100% அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாடு முழுவதிலும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 100% எமது அதிகபட்ச கொள்ளளவில் நீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றன. சில மாவட்டங்களில் வறட்சியான வானிலை நிலவிய போதிலும் நீர் விநியோகம் குறைக்கப்படவில்லை. நீர் விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் இல்லை. எனினும், நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் 56%-ஐ விடக் குறைவடைந்த சில நீர்த்தேக்கங்கள் உள்ளன” எனக் கூறினார்.

