தமது உரத்தினை ஏற்க மறுத்த இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள சீனாவின் உர நிறுவனமானது, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளது.
சீவின்பயோடெக் நிறுவனமே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் சீவின்பயோடெக் நிறுவனத்தின் உரத்தில் ஆபத்தான பக்டிரீயாக்கள் காணப்படுவது உள்ளுர் சோதனைகளின் மூலம் உறுதியானது.
அதை தொடர்ந்து அந்த உரத்தினை நிராகரித்துள்ள அரசாங்கம் , சீன நிறுவனத்திற்கு 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கம் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ள போதிலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சீன நிறுவனம் தொடர்ந்தும் போர்க்கொடி தூக்கிவருகின்றது.
இந்த விவகாரத்தினால் தனது பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அந்த நிறுவனம் , தொடர்ந்து சீன அரசாங்கம் இலங்கை மீது தடைகளை விதிக்கவேண்டும் என அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளதுள்ளது.
சீனாவின் நிறுவனத்திற்கும் இலங்கையில் உள்ள அந்த நிறுவனத்தின் தொடர்பாளர் ஒருவருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் சீன நிறுவனம் இலங்கைக்கு எதிராக எவ்வாறானநடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அதோடு இலங்கையை சேர்ந்த தங்கள் பிரதிநிதியுடனான தொடர்பாடலின்போது இலங்கையை நம்பவேண்டாம் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு ஏதாவது பொருட்களை அனுப்புவதாகயிருந்தால் முதலில் முன்கூட்டிய பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. நாங்கள் மேலும் பல சர்வதேச நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்யப்போகின்றோம் எனவும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையிலிருந்து வந்த தேயிலையை தடை செய்யவேண்டும் என சீன அரசாங்கத்தை குறித்த உர நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.