ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (04) தெரிவித்தார்.
மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ராஜபுர வைத்தியசாலையை வைபவ ரீதியாக திறந்து வைத்ததுடன், அங்கு கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொண்டார்.
தொற்றா நோய்கள் பலவற்றிற்கு சுதேச வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கும் மொனராகலை ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலை, நாற்பது நோயாளர்கள் ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ளது.
இவ்வைத்தியசாலையில் வெளிநோயளர் பிரிவு மற்றும் தங்கி சிகிச்சை பெறும் பௌத்த பிக்குமார் உள்ளிட்ட மத குருமார்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படும்.
வைத்தியசாலையின் திறப்பு விழாவில் வெல்லவாய சிறி பியரதன வித்யாயதனயவின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய கந்தஉட பங்குவே சுதம்ம தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் கலந்து கொண்டனர்.
ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு விழாவில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டு கௌரவ பிரதமர் ஆற்றிய உரை வருமாறு,
சுதேச மருத்துவத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச மக்களின் நலனுக்காக மேலும் ஒரு படி முன்னேற்றும் இவ்வாறானதொரு நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அரசாட்சிக்கும், மருத்துவத்திற்கும் திறமையான மன்னர்கள் இருந்த பெருமைக்குரிய வரலாறு எமக்குள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எமது முன்னோர்கள் பாதுகாத்த, எமது சுதேச சிகிச்சை முறைகளை அவ்வாறே எமது எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாத்து கையளிப்பது போன்றே அதனை சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என நாம் நம்புகின்றோம்.
அதற்காக சுமித் ராஜபுர போன்ற சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற எமது நாட்டின் சுதேச வைத்தியர்கள் முன்னெடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எப்போதும் பாராட்டுகின்றோம்.
சுதேச வைத்தியம் என்பது எமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். அன்று மேற்கத்தேய வைத்திய முறை பிரசித்தி பெறாத காலப்பகுதியில் சுதேச மருத்துவத்தின் மூலமே மக்கள் பூரணமாக குணப்படுத்தப்பட்டனர்.
எவ்வாறான நோய்களுக்கும் அன்று கிராம நாட்டு வைத்தியர்களினாலேயே (´வெத மஹத்தயா´) சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்றும் நாட்டு வைத்திய பரம்பரையில் உருவாகிய நாட்டு வைத்தியர்கள் காணப்படுகின்றனர்.
அதேபோன்று அதற்கு மேலாக முன்னேறிய ஆயுர்வேத வைத்தியர்களும் உள்ளனர்.
இதன் முக்கியத்துவத்தை முன்கூட்டியே அறிந்தவர்களாகவே சுதேச மருத்துவத்தை மேம்படுத்துவதற்கு இராஜாங்க அமைச்சொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம். நாம் அறிந்த வகையில் அந்த அமைச்சினால் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பதிவுசெய்யப்பட்ட சுமார் இருபதாயிரம் வைத்தியர்களின் விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சுதேச மற்றும் ஆயுர்வே மருத்துவம் இக்காலப்பகுதியில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று வருகிறது. அதன் மூலம் நாம் உச்ச பயனை பெற வேண்டுமாயின் தற்போதிருந்தே அதற்கு தயாராக வேண்டும்.
பார்கின்சன், பக்கவாதம் போன்ற நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சுதேச வைத்திய மத்தியநிலையமொன்றை நமது நாட்டில் உருவாக்க நாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம்.
இன்று திறக்கப்பட்டுள்ள ராஜபுர வைத்தியசாலையில் சுதேச வைத்தியம் போன்றே ஆயுர்வேத மருத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என எமக்கு அறிய கிடைத்தது. இவ்வைத்தியசாலையிலும் பல தொற்றா நோய்களுக்கு சிகிச்சை வழங்க முடியும் என அவர்கள் கூறியுள்ளனர். அதனால் எதிர்காலத்தில் சுதேச சிகிச்சை முறைகளை தேடி வரும் வெளிநாட்டவர்களுக்கும் இவ்வாறான வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கான வசதி கிட்டும்.
மருத்துவ குணம் கொண்ட மரங்கள், இலைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் நச்சற்ற உணவு பண்டங்கள், மருந்;துப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கும் உலகளாவிய ரீதியில் அதிக கேள்வி காணப்படுவதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த கேள்வியை வெற்றிக் கொள்ள முடியுமாயின் அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பலமாகும்.
இன்று உண்மையில் சரியான வைத்தியரை தெரிவுசெய்வதில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். சிலர் வைத்தியர்கள் போன்று போலியாக செயற்பட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும் சிலர் தமது கல்வியறிவுடன் தொடர்பற்ற நோய்களுக்கு சிகிச்சை அளித்து நோயாளர்களை துன்பத்தில் தள்ளுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் சமூகத்திலிருந்து விலக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதேபோன்று சுதேச வைத்தியம், ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அதன் முடிவுகளை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு திட்டமொன்றை தயார்ப்படுத்துமாறும் நாம் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். அதனால் இதுவரை கண்டிராத ஒரு தரத்தை இவ் அனைத்திலும் காண கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
அன்று சுதேச மருத்துவம் பணத்தை எதிர்பார்த்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமல்ல. நான் அறிந்த வகையில் பௌத்த பிக்குமார் உள்ளிட்ட மத குருமார்களுக்கு இவ்வைத்தியசாலையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனை ஒரு மகத்தான செயற்பாடாக நாம் அனைவரும் பாராட்டுகின்றோம் என்பதையும் இத்தருணத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.