ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்தின் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக பேருந்துக்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என வெளியிடப்பட்ட அறிக்கை தற்பொழுதும் அமுலில் உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பெரும்பாலான பேருந்துக்கள் ஆசன எண்ணிக்கையை விட அதிகளவில் பயணிகளை ஏற்றிச்செல்கின்றன. இதனால் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது.
ஆசன எண்ணிக்கையின் அளவுக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்வதால் பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தினை கருத்தில் கொண்டு அண்மையில் பேருந்து கட்டணத்தை 20 வீதத்தினால் அரசாங்கம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.