கரூரில் ஆன்லைன் விளையாட்டில் 4,500 பாயிண்டுகள் கடன் வாங்கியதால், நண்பர்கள் பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டியதால் சிறுவன் வீட்டை விட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகேயுள்ள தான்தோன்றிமலை, சத்திய மூர்த்தி நகரில் வசிக்கும் ஒருவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும், 15 வயதில் மகனும் உள்ளனர். மகன் 10- ம் வகுப்பு படித்து வருகிறான். கொரனோ கால கட்டம் என்பதால் மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்காக, சிறுவனுக்கு பெற்றோர் ஆன்ராய்ட் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். படிப்பு நேரம் போக, மீதமுள்ள நேரங்களில் ப்ரி பயர் ஆன் லைன் விளையாட்டை பதிவிறக்கம் செய்து சிறுவன் விளையாடி வந்துள்ளான். குழு விளையாட்டு என்பதால் முன்பின் அறிமுகம் இல்லாத சிறுவர்களுடன் சேர்ந்து சிறுவன் விளையாடியுள்ளான். இதற்காக, 3- க்கும் மேற்பட்ட கணக்கை சிறுவன் தொடங்கியுள்ளான்.
இதில், சிறுவன் ஒவ்வொரு முறையும் தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடன் விளையாடும் சக சிறுவர்களிடம் பாயிண்ட்களை கடன் பெற்று விளையாடியும், அவற்றை திரும்ப செலுத்துவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளான். கடந்த சில மாதங்களில் சுமார் 4500 பாய்ண்ட்ஸ் கடனாகப் பெற்று விளையாடியுள்ளான். அவற்றை, சிறுவனால் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடனை ஈடுகட்ட தான் பயன்படுத்திய 2 கணக்குகளை மற்ற சிறுவர்களுக்கு வழங்கியுள்ளான் .