மோசடி விசாவைப் பயன்படுத்தி ஜெர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற நிலையில் கைதான இளைஞன் யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
இந்தியாவின் புது தில்லிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானம் ஊடாக முதலில் புது தில்லிக்குச் சென்று பின்னர் ஜெர்மனிக்கு மற்றொரு விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் இளைஞர் அளித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த இந்திய விமானப் போக்குவரத்து உத்தியோகத்தர்கள், அந்தப் பயணியையும் அந்த ஆவணங்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளின் போது, அவர் வழங்கிய ஜெர்மன் விசா போலியானது என்பது தெரியவந்தது.
விசாரணையில் தனது பாஸ்போர்ட்டில் ஒரு போலி குடியேற்ற முத்திரையை பாவித்து , தன்னை ஒரு ஜெர்மன் நாட்டவர் என்று கூறி, சமீபத்தில் காங்கேசன்துறை துறைமுகம் வழியாக நாட்டிற்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இளைஞனைக் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.