ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர் சின்டி மெக்கெய்ன் இன்று இலங்கை வரவுள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் இருப்பார் என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.
இலங்கையில் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் உணவு உதவி திட்டங்களை முன்னிலைப்படுத்துவதற்காகவும், இலங்கையின் நலன்கள் தொடர்பில் அமெரிக்க கொண்டுள்ள உறுதிப்பாடு மற்றும் இலங்கையுடனான நீடித்த பங்காண்மை ஆகியவற்றினை மீள் வலியுறுத்துவதற்காகவும் அவர் இலங்கை வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அரசாங்க அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களையும் அவர் தமது விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் இணைந்து மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கு விஜயம் செய்து அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்ட மனிதாபிமான உதவி திட்டங்கள் ஊடாக நிவாரணம் பெற்றவர்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துபவர்களுடன் அவர் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.