வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு பிரிவினர் தீயினை அணைக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் தீப்பிழம்புடன் சத்தம் கேட்டதினை அவதானித்த அயலவர்கள் வெளியில் சென்று பார்வையிட்ட சமயத்தில் குறித்த மதுபானசாலையில் தீப்பற்றி எரிந்ததினை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட அயலவர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் ஒரு மணி நேரமாக தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் கட்டிடத்தின் மேல்ப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
விருந்தினர் விடுதியின் உட்பகுதி மதுபானத்துடன் தொடர்ந்தும் எரிந்த வண்ணமுள்ளது.
மேலும் விரைந்து செயற்பட்ட இலங்கை மின்சார சபையினர் குறித்த பகுதிக்கான மின்சாரத்தினை துண்டித்துள்ளதுடன், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுபானசாலை கட்டிடத்தினுள் இருந்து வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளமையினால் தீயினை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.