வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூவரும் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா – சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா – புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 93 வயதுடைய ஆண் ஒருவரும், வவுனியா – பிரமனாலங்குளம் பகுதியைச் சேர்ந்த 90 வயது பெண் ஒருவரும் என மூவரே உயிரிழந்துள்ளனர்.
மேலும் குறித்த பெண்களில் ஒருவர் சுந்தரபுரம் பகுதியில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த முதியவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.